2ஜி ஊழலை விழுங்கிய நிலக்கரி ஊழல்
ஊழல்.. ஊழல்.. ஊழல் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது தான் நாட்டின் தற்போதைய நிலை என்றாகி விட்டது.
2ஜி அலைக்கற்றை தான் நாட்டின் மிகப் பெரிய ஊழல் என்ற நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அதை விழுங்கும் விதமாக தற்போது மிகவும் பூதாகரமாக வந்துள்ளது நிலக்கரி ஊழல்.
மின்சாரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, விமான நிலையத்தை தனியார் மயமாக்கியது ஆகியவை குறித்து மத்திய கணக்கு தணிக்கை அதிகாரிகள்(சி.ஏ.ஜி) ஆய்வு நடத்தி வந்தனர். இது தொடர்பான மூன்று அறிக்கைகளை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கல் செய்தனர். அதில் 2004-2009ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது, சுமார் 44 பில்லியன் தொன் நிலக்கரிகள் கொண்ட சுரங்கங்களை ஏலமே விடாமல் மிக மிகக் குறைவான விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஈசார் பவர், ஹிந்தால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிந்தால் ஸ்டீல் மற்றும் பவர் உட்பட 25 நிறுவனங்கள் இந்நிலக்கரி சுரங்க கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் நிலக்கரி சுரங்கத்தை ரிலையன்ஸுக்கு ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், டாடா நிறுவனமும் தென் ஆப்பிரிக்காவின் சசோல் நிறுவனமும் இணைந்து தொடங்கிய ஸ்ட்டர்ஜி எனர்ஜி டெக் சிஸ்டம்ஸ், அனில் அகர்வாலின் நிறுவனங்கள், அதானி குரூப், ஆர்சலர் மிட்டல், எஸ்ஸார் குரூப், லான்கோ ஆகிய நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்துள்ளன.
இந்த கால கட்டங்களில் 142 நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழல் நடந்ததாக கூறப்படும் காலகட்டமான 2005- 2009ம் ஆண்டுகளில், நிலக்கரி சுரங்க அமைச்சராக பதவி வகித்தவர் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் தொடர்பான அறிக்கையானது நேரடியாக பிரதமர் அலுவலகத்தை குற்றம் சுமத்தி தகவல் வெளியிடாத போதிலும், எதிர்க்கட்சிகள் தற்போது பிரதமரையே சாடிவருகின்றன. எனவே இந்த ஊழலுக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இதே போன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜும் பிரதமரை பதவி விலகுமாறு வற்புறுத்தி உள்ளார்.
நாடாளுமன்றம் முடக்கம்:
ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி நாடாளுமன்றம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் முடக்கப்பட்டது. பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் கோபத்துடன் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டனர்.
இவர்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, அகாலிதளம் ஆகிய கட்சிகளும், பிஜு ஜனதா தளமும் சேர்ந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் பொய்யானது - ப.சிதம்பரம்:
இந்நிலையில் ப.சிதம்பரம் அவர்கள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் என்று கூறுவது பொய்யானது என தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பாரதிய ஜனதா தலைமையிலான முந்தைய அரசும், அதற்கு முந்தைய அரசுகளும் கடைபிடித்த வழிமுறைகளை பின்பற்றியே நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக இருக்கும் கொள்கையை பின்பற்றியதற்காக தாங்கள் விமர்சிக்கப்படுவது வருத்ததை அளிக்கிறது. இருப்பினும் அரசுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க பிரதமர் தயாராக இருக்கிறார், இதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை எனவும் தெரிவித்தார்.
பிரதமர் விளக்கம்:
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்கையில், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சுரங்க முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை.
அதே போன்று தணிக்கை துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சர்ச்சைக்குரியவை என்று தெரிவித்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது.
நிலக்கரி துறை அமைச்சர் சிறீ பிரகாஷ் ஜைஸ்வால்:
நிலக்கரி துறை அமைச்சர் சிறீ பிரகாஷ் ஜைஸ்வால், சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பில் நாங்கள் மிகவும் வெளிப்படையான முறையையே பின்பற்றியுள்ளோம். நிலக்கரி மட்டும் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. நாட்டின் தொழில் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க தனியார் நபர்கள் மிக அவசியமாகினர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சுரங்கங்கள் ஒதுக்கீட்டின் போது ஏற்கனவே நடைமுறையில் இருந்த சட்டதிட்டங்கள் ஏலத்தை அனுமதிக்கவில்லை. கொள்கை முறைகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதற்கு சில வருடங்கள் ஆவது வழமை. இந்த தாமதம் நாட்டின் பொருளாதாரத்தையும், கைத்தொழிலையும் சில வேளைகளில் பாதிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த விளக்கதை மறுத்துள்ள தணிக்கை குழு, நிலக்கரி சுரங்கத்திற்கான விலைப்பட்டியல் 2006ம் ஆண்டே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டதாகவும், 2010ஆம் ஆண்டில் இதில் இறுதி திருத்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதே வேளை பிரதமரை பதவி விலக கோருவது சரியல்ல என கூறியுள்ள ஐஸ்வால் , இவ்விவகாரத்தில் பிரதமரை பதவி விலக கோரும் பாஜகவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது, அது அர்த்தமற்றது. தனியார் நிறுவனங்களுக்கு சுரங்கங்கள் விற்கும் நடைமுறையை பாஜகவும் ஏற்றுக்கொண்டிருந்தது.
மேலும் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கத்தில் உள்ள சட்டிஸ்கர், மேற்கு வங்கதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் ஏல முறையை முழுவதுமாக எதிர்த்திருந்ததுடன், நிலக்கரி சுரங்கங்களின் விலையை, ஏல முறைமை உயர்த்திவிடும் எனவும், அது தமது மாநிலங்களில் தொழில் வளர்ச்சியை மோசமாக பாதிக்கும் எனவும் அவர்கள் கூறியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் வரையறுக்கப்பட்டிருந்த போட்டி விலைபட்டியல் முறையிலோ அல்லது ஏல முறைப்படியோ நிலக்கரி சுரங்கங்களை விற்பனை செய்திருந்தால் அதிக லாபம் பெற்று தேசிய கருவூலத்தில் பணத்தை சேர்த்திருக்கலாம் என மத்திய கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது.
நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே இவ்வாறான ஊழல் குறித்த சர்ச்சையில் சிக்கினால் நாட்டின் நிலை என்ன? இந்தியா 2020ல் வல்லரசாகுமா?
ஒரு பக்கம் ஊழல், மறு பக்கம் அதிகரிக்கும் விலை வாசி என தொடர்ந்து கொண்டிருந்தால் நாட்டில் அன்றாட பிழைப்புக்காக பாடுபடும் மக்களின் நிலை என்ன? அவர்களின் தேவைகள் பூர்த்தியாகுமா? பொதுமக்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று!...
hits
Last update: 2012-09-03 15:46:17