தமிழக முன்னாள் சட்டப்பேரவை செயலர் எம்.செல்வராஜ், அரசுப்பணிகளை மேற்கொள்வதாகக்கூறி தனது சொந்தப்பணிகளை செய்து இதன் மூலம் அரசுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதன் புகாரின் அடிப்படையில் இந்த சோதனை இன்று நடைபெற்றது.
இவருடன் அப்போதைய குழு அதிகாரி பி.எஸ்.கே.சிங்காரவேலு, பிரிவு அதிகாரி எஸ்.பாலகிருஷ்ணன், இணை செயலர் கே. இந்திரா ஆகியோரது வீடுகளில் சோதனைகள் நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்திய தண்டனைச்சட்டம் 409, 109, ஊழல் தடுப்புச்சட்டம் 13(1), 13(2) மற்றும் 15 ஆகிய பிரிவுகளில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் இவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2007-11க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த முறைகேடுகளால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. |