தமிழ்நாட்டில் அதிமுக அரசின் அராஜகப் போக்கைக்கண்டித்து பிரதான எதிர்கட்சியான திமுக சிறை நிரப்பும் போராட்டத்தில் இன்று களமிறங்குகின்றது.
சிறை நிரப்பும் போராட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.
தனது மகளும் ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி இப்போராட்டத்தில் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்றும் தனது மகனும் திமுகவின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
இருந்தாலும் ஸ்டாலின் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க அவர்களுக்கு அனுமதி உண்டு எனவும் கருணாநிதி கூறியுள்ளார்.
முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இதன் பின்னரே சிறை நிரப்பும் போராட்டத்தை திமுக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. |