குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பானு பட்டேல். எம்பிபிஎஸ் படித்துள்ள இவர் கடந்த 2004ம் ஆண்டு பெரா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2005ம் ஆண்டு இவருக்கு அகமதாபாத் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதை தொடர்ந்து அவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவருக்கு படித்தவர் என்பதால் சிறையில் உள்ள கிளினிக்கில் இவர் வேலையில் அமர்த்தப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து சிறை லைப்ரரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த கால கட்டத்தில் மருத்துவர் பாலாசாகிப் அம்பேத்கர் திறந்த வெளிபல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில் எம்எஸ்சி, பிகாம், எம்காம் மற்றும் பட்டமேற்படிப்பு டிப்ளமோ என 31 பட்டங்களை வாங்கிக் குவித்தார்.
சிறையிலிருந்து விடுதலை ஆன பின்பு இவரது சாதனையை பாராட்டி அம்பேத்கர் பல்கலைக்கழகம் இவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கி கவுரவித்தது.
தற்போது இவர் மாநில சிறைகளில் உள்ள 26 தொலைதூர கல்வி மையங்களில் கைதிகளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்.
சிறையிலிருந்தபடியே 31 பட்டங்களை பெற்ற இவரது சாதனை உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இதற்கான சான்றுகள் நேற்று அவருக்கு அளிக்கப்பட்டது. லிம்கா சாதனை புத்தகத்தின் 2013ம் ஆண்டுக்கான வெளியீட்டில் இவரது சாதனை இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |