மும்பை தாக்குதலில் தொடர்புடைய அபு ஜிண்டாலை சவுதி நாடு கடத்தி இந்தியாவிற்கு அனுப்பியது. இங்கு புதுடெல்லி விமானநிலையத்தில் கைதான ஜிண்டாலை தற்போது டெல்லி சிறப்புப்பிரிவு பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இவன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தகவல் சுரங்கமாக இருக்கின்றான். அவ்வமைப்பின் திட்டங்களை தெரிவித்து வருகின்றான்.
அவன் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ள தகவல்கள் குறித்து பொலிஸ் வட்டாரங்கள் கூறியதாவது: காஷ்மீரைச் சேர்ந்த லஷ்கர் கொமாண்டர் ஒருவர்தான் ஜிண்டாலை அந்த அமைப்பிற்குள் கொண்டு வந்தார்.
அவரது பெயர் அஸ்லம் காஷ்மீரி. இன்னொரு லஷ்கர் தீவிரவாதியான ஃபயாஸ் காக்சி மூலமாக அவர் ஜிண்டாலை மகாராஷ்டிரத்தில் கடந்த 2005-ல் சந்தித்தார். அவருக்கு இந்திய முஸ்லிம் இளைஞர்களைத் தெரிவு செய்து தீவிரவாதப் பயிற்சி அளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
எனவே அவர் மிகச் சுலபமாக ஜிண்டாலைத் தன் வழிக்குக் கொண்டு வந்தார். மும்பை மீதான தாக்குதலுக்கு முன்பும், பின்பும் ஜிண்டால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தங்கியுள்ளார். அங்குள்ள முஸாபராபாத்தில் லஷ்கர் அமைப்பின் காஷ்மீர் பிரிவுத் தலைமையுடன் நெருக்கமாகியுள்ளார்.
அந்த நகரில் ஐக்கிய ஜிகாத் சபை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. தீவிரவாத அமைப்புகளின் கூட்டமைப்பான இது, புதிய தீவிரவாதக் குழுக்களை ஜம்மு காஷ்மீருக்குள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய மரபு சாராத வழிகள் மூலமாக அனுப்பி வைக்கத் திட்டமிட்டு வருகிறது.
அங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் தீவிரவாதிகள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் பல்வேறு நகரங்களில் வழிபாட்டுத் தலங்களையும், மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளையும் குறிவைப்பார்கள்.
காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்கள், லஷ்கர் தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. |