தமிழக முதல்வர் ஜெயலலிதா: இஸ்லாமியப் பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில் எனது உள்ளம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்கள் அற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகுக்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு தங்கள் கடமைகளை செவ்வனே மேற்கொண்டு வாழ இந்த இனிய நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவர் கருணாநிதி: தொழிலாளர்களின் வியர்வை உலரும் முன் அவன் கூலியை கொடுத்து விடு, அநீதி செய்யும் அரசை எதிர்த்து பேராடு, உணவு தானியங்களை பதுக்கி வைத்து செயற்கை பஞ்சத்தை ஏற்படுத்தாதே, அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் போது நீ மட்டும் சாப்பிடாதே, உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடு என்ற நபிகளின் மணிவாசகங்களை மனிதில் பதித்து எளியோருக்கு ஈந்து நோன்பு கடமைகளை நிறைவேற்றி, ரம்ஜானை கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கவர்னர் ரோசய்யா: இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். குரானில் சொல்லப்பட்டுள்ள வாழ்வியல் நெறிப்படி வாழும் போது சிறந்த சமுதாயம் அமையும். இந்த விழா அன்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சகோதரத்துவம், சமூக ஒற்றுமைகளை வளர்க்கட்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஏழை, எளியோருக்கு வழங்கி வாழ்ந்து காட்டும் இவ்வினிய நன்னாளில் சமய ஒற்றுமை தழைக்க, தமிழகத்தில் வளர்ந்தோங்கி வரும் நல்லிணக்கத்தை பேணி வளர்க்க சூளுரைத்து மதிமுக சார்பில் இனிய ரம்ஜான் வாழ்த்துக்களை இஸ்லாமிய மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். |