ஆந்திராவை சேர்ந்த நாராயண ரெட்டி என்பவர், கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். பீளமேடு சவுரிபாளையம் ரோட்டில் உள்ள மணியகாரன் தோட்டம் பகுதியில் புதிதாக பங்களா கட்டி வருகிறார்.
ஓராண்டாக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. சவுரிபாளையத்தை சேர்ந்த இளங்கோ(63), ராமசாமி(69) ஆகியோர் காவலாளிகளாக பணியாற்றி வந்தனர். இளங்கோ நேற்று பகல் நேர பணியில் இருந்தார். அவரை மாற்றிவிட இரவு 8 மணிக்கு ராமசாமி வந்தார்.
சிறிது நேரம் கழித்து மணல் இறக்குவதற்காக லாரி ஒன்று வந்தது. கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த லாரி டிரைவர், காவலாளிகள் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு 2 காவலாளிகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து திடுக்கிட்ட அவர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார். துணை கமிஷனர் ஹேமா கருணாகரன், உதவி கமிஷனர் சந்திரமோகன் மற்றும் பொலிசார் வந்து, இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணி(28) என்பவர்தான் இரட்டை கொலையை செய்தது தெரியவந்தது. மணி, சில மாதங்களாக அந்த கட்டிடத்திலேயே தங்கி வேலை செய்து வருகிறார்.
தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து காவலாளிகளிடம் தகராறு செய்துள்ளார். கடந்த மாதம் ஆறுமுகம் என்ற காவலாளியை விரட்டி விட்டுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு போதையில் இருந்த மணி, வழக்கம்போல காவலாளிகளிடம் தகராறு செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் கிடந்த கல் மற்றும் இரும்புக்கம்பியால் இருவரையும் மணி தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த அவர்கள் அதே இடத்தில் இறந்தனர். இரட்டை கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், தலைமறைவாக உள்ள மணியை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றது.

|