| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| மக்களாட்சி மாண்பை உணர்த்தும் சின்னம் புதிய சட்டப்பேரவை வளாகம்: மு.கருணாநிதி |
| [ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 05:13.05 AM GMT +05:30 ] |
புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டப்பேரவை வளாகம் மக்களாட்சியின் மாண்பை உணர்த்தும் சின்னம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். |
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் உருவாக்கியதாலும், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையைக் கட்டியதாலும், புதியதோர் எழுச்சி தமிழுக்குக் கிடைப்பதை உணர்ந்த நல்லோர் சிலர், மயிலை திருவள்ளுவர் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டுமென முறையீடு தந்தனர். அப்போது சென்னை நகரின் நடுப்பகுதியில் கோட்டம் ஒன்று அமைத்தால் என்ன என்ற ஆசை எனக்கு தோன்றியது. அதுபற்றி விவாதித்து, நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில் வள்ளுவர் கோட்டத்தை அமைத்திட முடிவு செய்யப்பட்டது. பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடப் பணிகளை முன்னின்று நடத்திய சிற்பி கணபதி ஸ்தபதியாரும், குமரி முனையில் விவேகானந்தர் மண்டபத்தை வியக்கத்தக்க வண்ணம் வடித்துத் தந்த சிற்பி எஸ்.கே.ஆச்சாரும், வள்ளுவர் கோட்டம் அமைக்கும் வேலைகளை 18.9.1974ல் தொடங்கினர். வள்ளுவர் கோட்டம் ரூ.99 லட்சத்தில், 1976ம் ஆண்டு ஜனவரியில் கட்டி முடிக்கப்பட்டது.
வள்ளுவர் கோட்டத்தின் முகப்பில், காண்போர் கருத்தைக் கவரும்வண்ணம், தோரணவாயில் அமைக்கப்பட்டு, அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்ற முதல் குறள் பொறிக்கப்பட்டது. குறள்மணி மாடத்தில், அழகிய வண்ண சலவை கற்பலகைகளில், திறந்த புத்தக வடிவில், தூண் ஒன்றிற்கு இரண்டு அதிகாரங்கள் வீதம் 1330 குறட்பாக்கள் அமைக்கப் பட்டன.
வள்ளுவர் கோட்டத்திற்கு மணிமுடி வைத்தார்போல், காண்போர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து உயர்ந்து நிற்பது சிற்பத் தேராகும். வள்ளுவர் கோட்டம் 15.4.1976ல் தமிழக ஆளுநர் தலைமையில், குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர் என்ற முறையிலோ, அந்த வள்ளுவர் கோட்டம் எழும்பிடக் காரணமாக இருந்தவன் என்ற முறையிலோகூட நான் அழைக்கப்படவில்லை.
உயிர்வளர் மாதம் ஒன்பதும், ஒன்றும் நிறைந்து, பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக்கால வேதனையையும் இனிய வேதனையாகக் கொண்டு, பாலூட்டிச் சீராட்டிப் பழமுத்தம் சுளைசுளையாய் தந்து, பள்ளிக்கனுப்பி, பின்னழகும் முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத்துணை ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமணவிழா நடைபெறும்போது, தாலி கட்டும் காட்சியினைக் காணமுடியாமல், மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒருவிதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச்செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும். அந்தத் தாயின் மகிழ்ச்சியைத்தான் நான் பெற்றேன் அன்று. என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் கண்டு, ஆனந்தம் கொண்டேன்.
நான் 3வது முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், குமரிமுனையில் வள்ளுவருக்கு குறளின் அதிகாரங்களை குறிக்கும்வண்ணம் 133 அடி உயரமுள்ள மாபெரும் சிலை ஒன்று அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று 17.3.1990ல் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, நிதி ஒதுக்கீடும் செய்து, கல்லில் சிலை சமைக்கும் பணியினை கணபதி ஸ்தபதியாரிடம் ஒப்படைப்பதற்கான ஆணையினை 19.7.1990ல் வழங்கி னேன். 6.9.1990ல் குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை அமைப்பு பணியை நான் நேரில் சென்று தொடங்கி வைத்தேன்.
அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும்வகையில், சிலையின் பீடத்தின் உயரம் 38 அடி என்றும் பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில், பீடத்தின் மேல் சிலையின் உயரம் 95 அடி என்றும் ஆகமொத்தம் 133 அடி என்றும் சிலை அமைப்பதற்கு 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3,681 கற்கள் தேவையென்றும்; 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலையின் மொத்த எடை 7,000 டன் என்றும் கணக்கிடப்பட்டது. 1990ம் ஆண்டு சிலை அமைப்புப் பணி தொடங்கிய போதிலும், 1991ம் ஆண்டு முதல் 1996, மே வரையிலான காலத்தில் பணிகள் மிகவும் தொய்வடைந்து நின்றுவிட்ட நிலையில் இருந்தன.
நான்காவது முறையாக முதலமைச்சராக மீண்டும் நான் பொறுப்பேற்றதற்குப் பிறகு, சிலை அமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் திருவள்ளுவர் சிலை, உலகத் தமிழினமே ஒன்று திரண்டு நிற்க, 2000ம் ஆண்டு ஜனவரி முதல்நாள் சூழும் தென்கடல் ஆடும் குமரிமுனையில் என்னால் திறந்து வைக்கப்பட்டது.
எனது நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் மற்றொரு நினைவுச் சின்னம் சென்னை& தரமணியில் உருவாக்கப்பட்ட டைடல் பூங்கா எனப்படும் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் பூங்கா. மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் மேற்கொண்ட முனைப்பான முயற்சிகளின் காரணமாக, தகவல் தொழில்நுட்பத்திற்கென்று தனியே கொள்கை உருவாக்கி அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என்ற சிறப்பு நமக்குக் கிடைத்தது.
ஐதராபாத், பெங்களூரு மென்பொருள் பூங்காவை விடவும், மிகப்பெரிய மென்பொருள் பூங்கா ஒன்று, டைடல் பூங்கா என்ற பெயரில் சென்னை&தரமணியில் ரூ.340 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு, 4.7.2000ல் பிரதமர் வாஜ்பாயால் திறந்து வைக்கப்பட்டது. அந்த மென்பொருள் பூங்கா அமைக்கப்பட்டதற்குப் பிறகுதான் பழைய மாமல்லபுரம் சாலை மென்பொருள் பூங்காக்கள் நிறைந்த சாலையாக மாறி, தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலை என்று பாராட்டப்பட்டது. கழக அரசு அந்த சாலை க்கு ராஜீவ்காந்தி சாலை என்று பெயரிட்டது. டைடல் பூங்கா தமிழகத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
பயனுள்ள தொன்மையினையும், பழம்பெரும் பண்பாட்டினையும் புதுப்பித்திடும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அதேவேளையில், 21ம் நூற்றாண்டை நோக்கி உலக அறிவியலும், தொழில்நுட்பமும் வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதால், எந்தவகையிலும் தமிழகம் பின்தங்கி விடக்கூடாது என்ற நமது அக்கறை உணர்வுக்கு அடையாளச் சின்னம்தான் டைடல் பார்க்.
இவற்றின் தொடர்ச்சியாகவே, திராவிடப் பழைமையும், பொறியியல் புதுமையும் பின்னிப்பிணைந்த பிரம்மாண்டச் சின்னமாய் சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை தலைமைச் செயலக வளாகம் எழுப்பப்பட்டு வருகிறது. தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து, திராவிடக் கட்டடக் கலையின் வெளிப்பாடாக, எல்லா வகைகளிலும் உலகத் தரம் வாய்ந்ததாக புதிய கட்டடங்கள் உருவாகின்றன. ரூ.450 கோடியில் 9 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு; ஜெர்மனியைச் சேர்ந்த ஜி.எம்.பி. நிறுவனம் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத பசுமைக் கட்டடமாக வடிவமைத்து தேசிய அளவிலான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி கோரிய ஈ.சி.சி.ஐ. நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு, 12.11.2008 முதல் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
கட்டடத்தின் வெளிப்பகுதியில் வேதியியல் வண்ணப்பூச்சைத் தவிர்த்து, கண்ணாடியும் மெருகேற்றப்பட்ட கருங்கல் பலகையும் பொருத்தப்படுகிறது. நான்கு வட்டங்கள் கொண்ட இக்கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாம் வட்டத்தின் மேல்தளத்தில் பசுமையான தோட்டமும், வெளிப்புறம் வாகனங்கள் செல்ல கூரை அமைக்கப்பட்ட சாலையும், கூரையின் மேல் புல்வெளி மற்றும் செடிகள் அமைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் குறைந்த அளவு மின்சாரத்தில் எரியும் விளக்குகள் மற்றும் மின்சாரக் கருவிகள் உபயோகிக்கப்படுகின்றன.
இந்தியாவில் எங்கும் இல்லாத புதிய வடிவமைப்பாக இந்தக் கட்டடம் இருப்பதாலும், அதிநவீன தொழில் நுட்பத்தில் கட்டப்படுவதாலும், மற்ற கட்டடங்களுக்கு இது முன்னுதாரணமாக விளங்கும். தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்திற்கான புதிய கட்டடத்தை 13.3.2010ல் பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் சோனியாகாந்தி, ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா ஆகியோர் முன்னிலையில், எனது தலைமையில் திறந்து வைக்க இருக்கிறார்கள்.
கட்டடம் சிறப்பாக நிறைவு பெறுவதற்குப் பாடுபட்ட தலைமைச் செயலாளர் உட்பட அதிகாரிகள், ஜெர்மன் ஜி.எம்.பி. நிறுவனம், ஈ.சி.சி.ஐ. நிறுவனம், அந்த நிறுவனங்களின் அலுவலர்கள், அல்லும்பகலும் அயராது பாடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான நினைவுச் சின்னங்களை தமிழகத்திலே உருவாக்கிய பெருமை கழக ஆட்சிக்கு உண்டு. 13.3.2010ல் திறக்கப்படவிருப்பது மக்களாட்சியின் மாண்பினை உணர்த்தும் மாபெரும் சின்னம். திறப்புவிழாவுக்கு உனது வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன். என்னை மகிழ்விக்கச் சென்னைக்கு வருவாயா?
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|