வடமாநிலங்களில் இந்த ஆண்டு பனிப் பொழிவு கடுமையாக உள்ளது. குறிப்பாக காஷ்மீரில் அடிக்கடி பனிப்புயல் வீசி மக்களை திணறடிக்கிறது. சாலைகளில் பனிப் பாறைகள் பாளம், பாளமாக சரிவதால் அடிக்கடி போக்குவரத்து தடை ஏற்படுகிறது.
வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் கிலன்மார்க் பகுதியில் உள்ள மலை உச்சியில் ராணுவ முகாம்கள் உள்ளன. குல்மார்க்கில் உள்ள முகாம்களில் நூற்றுக்கணக்கானோர் தங்கியிருந்தனர். இங்கு கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்தது. நேற்று காலை திடீர் என்று கடுமையான பனிப்புயல் வீசியதில் ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டன.
சுமார் 350 ராணுவ வீரர்கள் பனிப்புயலில் சிக்கிக் கொண்டனர். அப்போது பனிப்பாறைகளும் சரிந்தன. இதில் 100 வீரர்கள் இருந்த ஒரு முகாமின் ஒரு பகுதி பனிக்குள் புதைந்தது. உடனடியாக மீட்புக் குழு விரைந்து சென்று பனிக்குள் புதைந்தவர்களை மீட்க போராடியது. 17 பேர் உடல்கள் பனிப் பாறைகளுக்குள் இருந்து மீட்கப்பட்டன. 70 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இறந்து போனவர்களில் ஒருவர் ராணுவ அதிகாரி. மற்றவர்கள் சிப்பாய்கள்.
இது குறித்து ராணுவ அமைச்சக அதிகாரி கூறுகையில், ‘‘கடந்த 3 நாட்களாக கடுமையான பனிப்பொழிவு இருப்பதாக தகவல் கிடைத்தது. பனிப்புயலில் ராணுவ வீரர்கள் சிக்கிய தகவல் கிடைத்தவுடன் ஆங்காங்கே முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் மீட்பு பணிக்காக விரைந்தனர். 17 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. 70 பேர் மீட்கப்பட்டதில் 15 பேர் நிலைமை மோசமாக உள்ளது. இன்னும் இருவரை காணவில்லை’’ என்றார்.
பாரமுல்லா போலீஸ் சூப்பிரண்ட் கூறுகையில், ‘‘ குல்மார்க் மலை 8 கி.மீ. உயரத்தில் உள்ளது. 10 ஆயிரம் அடி உயரத்தில் குளிர்கால போர் பயிற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தான் பனிப்புயல் தாக்கியுள்ளது’’ என்றார். ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ஜே.எஸ். ப்ரார் கூறுகையில், ‘‘ ராணுவத்துக்கு இது ஒரு துயரச் சம்பவம். ஆழமான பனிக்குள் இறங்கி காணாமல் போனவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். இறந்தவர்களில் பிரதீக், லெப்டினென்ட் அந்தஸ்தில் உள்ள அதிகாரி. மற்றவர்கள் மலை உச்சி போர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்தவர்கள்’’ என்றார்.
புயல் எச்சரிக்கை:
பனிப்புயல் ஆராய்ச்சி மையம் நேற்று முன்தினமே புயல் எச்சரிக்கை விடுத்தது. மலை உச்சிகளில் பனிப்புயல் வீசக்கூடும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், பனிப் பொழிவின் போது வீதிகளில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மக்கள் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். இன்னும் அடுத்த 24 மணி நேரத்துக்கு பனிப்புயல் வீசும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காஷ்மீரில் ஜவகர் குகைப் பாதை, காஷ்மீரின் நுழைவு வாயில், ஸ்ரீநகர்&ஜம்மு நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் தான் ஆபத்து குறைவானவை என்றும் பிற பகுதிகளை பனிப்புயல் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் நேற்று மீண்டும் எச்சரிக்கப்பட்டது.
|