நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அதிகரித்து வருவதால், மசோதாவை விவாதம் இன்றி நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ‘பெண்களின் தலைமைப் பண்பு’ என்ற கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க அரசு கடமைப்பட்டு உள்ளது. இதற்காக எந்த முயற்சியில் வேண்டுமானாலும் ஈடுபடுவோம். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்ததால் அடித்தளத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டு இருக்கிறது. இதை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், பஞ்சாயத்து மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் திட்டம் கொண்டு வரப்படும். இதை விரைவில் அமல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் பெண்களின் எழுத்தறிவு விகிதம் குறைவாக இருப்பதும், மகப்பேறு காலத்தில் உயிர் இழப்புகள் ஏற்படுவதும், பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருவதும் கவலை அளிப்பதாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பு 25.1 சதவீதமாகத்தான் இருக்கிறது. இது முன்னேற்றம்தான் என்றாலும், நாம் விரும்பிய முன்னேற்றத்தை இன்னும் அடையவில்லை.
இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி அனுப்பிய அறிக்கையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் வாசித்தார். அதில், ‘இந்த நாட்டுப் பெண்கள் தடைகளை உடைத்தெறிந்து விட்டனர். எனினும் கிராமங்களில் உள்ள நமது சகோதரிகளுக்கு இன்னும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்’ என்று சோனியா வலியுறுத்தி இருக்கிறார்.
மக்களவை சபாநாயகர் மீரா குமார் பேசுகையில், ‘‘தேவதைகளை வணங்குவது நமது பாரம்பரியம். ஆனால், நடைமுறையில் அது வேறு விதமாக இருக்கிறது. எல்லா வீட்டு வேலைகளையும் பெண்களே செய்கிறார்கள். நாட்டின் மொத்த வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். படித்த சமுதாயத்தில் கூட வரதட்சணைக் கொடுமை நடக்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். பஞ்சாயத்துகளில் மூன்றில் ஒரு பங்கு நிதியை பெண்கள் முன்னேற்றத்துக்காக ஒதுக்க வேண்டும்’’ என்றார்.
|