பெங்களூர் மாரத்தஹள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம். கிருஷ்ணா இது குறித்து கூறியதாவது:
முகம்களில் தங்கியுள்ள குடிமக்களை மறு குடியமர்த்துவதற்கு கூடுதல் நிதியுதவி கேட்கும் இலங்கையின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ள குடிமக்களுக்கு வீடுகட்டி கொடுக்க கட்டுமானப்பொருட்கள் தேவைப்படுவதாக இந்தியாவை இலங்கை கேட்டுள்ளது. இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே ஓரளவு உதவியுள்ளது. மேலும் உதவிசெய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். அங்கு வாழும் தமிழர்களின் நிலைமை மேம்பட்டு வருகிறது. முகாமில் 90 ஆயிரம் குடிமக்கள் தங்கியுள்ளனர். முகாமில் இவர்கள் அங்குமிங்கும் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சீனாவின் நிர்பந்தத்திற்கு ஆட்பட்டு அருணாசலபிரதேசத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆசியமேம்பாட்டு வங்கி நிதியுதவியை பெற இந்தியா தயங்குவதாக தவறான செய்தி பரவியுள்ளது. சீனாவின் நிர்பந்தத்திற்கு நாம் அடிபணியவில்லை. அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம். எனவே, வழக்கம் போல அம்மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நம் சொந்த நிதியில் செய்வோம். எனவே, உலக வங்கி மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவி அவசியமிருக்காது.
காபூலில் உள்ள இந்திய தூதரக ஊழியர்கள், தீவிரவாத தாக்குதல்களுக்கு பயந்து நாடு திரும்ப விரும்பவில்லை. எனினும், குடும்ப காரணங்களை சுட்டிக்காட்டி பணியிடமாற்றம் கேட்டால், அதை அரசு பரிசீலிக்கும்.
இந்திய தூதரகத்தின் மீது இரண்டு தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகு, 3&4 மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் சென்றிருந்தேன். அப்போது இந்திய தூதரக ஊழியர்களிடம், நாடு திரும்ப யாராவது விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, யாரும் இந்தியா திரும்ப முன்வரவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்குள்ள ஐ.எப்.எஸ். அதிகாரிகளின் மன உறுதி மற்றும் தீர்வுகாணும் திறன் இதன் மூலம் வெளிப்படுகிறது. இந்தியர்களை குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு ஓட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு, இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். |